6 லட்சத்து 78 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் திருப்பி கொடுப்பது எவ்வளவு என்றால், வெறும் 64 ஆயிரம் கோடி தான் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மத்திய அரசுக்கு தமிழக அரசு அதிகளவு வரி செலுத்தியும் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-
டெல்லியில் திமுக மாணவர் அமைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டமானது பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுகின்ற மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். இந்தியா கூட்டணியில் இருக்கின்ற தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருக்கின்ற எல்லா மாநில மக்களும், இது எவ்வளவு பெரிய துரோகம், மாநிலங்களின் அதிகாரத்தை எல்லாம் ஒவ்வொன்றாக மத்திய அரசு எப்படி பறிக்க நினைக்கிறது என மக்கள் கண்டன குரல்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மீனவர்கள் விவகாரம் குறித்து பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக எம்பிக்களும் பலமுறை நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு முறையான பதில்களை கொடுப்பதில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்து இருக்கிறது. யுஜிசி புதிய வரைவு விதியும் மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது. ஆசிரியருக்கு சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராமல் ஓரவஞ்சனை செய்கிறது மத்திய அரசு.
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்திற்கு ஒரு கண்டன குரல் கூட எழுப்பாமல் மோடி இருந்துவருகிறார். மத்திய பட்ஜெட்டை கண்டித்து திமுக சார்பில் நேற்று 72 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மாதவரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவத்தோடு உரையாற்றினார். அணைக்கட்டில் அமைச்சர் துரைமுருகனும், அமைச்சர்கள் தலைமையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகத்தை மக்கள் பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள். திமுக சார்பில் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால் ஏன் இந்த ஓரவஞ்சனை என்று தான்.
எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டி தரக்கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 6 லட்சத்து 78 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் திருப்பி கொடுப்பது எவ்வளவு என்றால், வெறும் 64 ஆயிரம் கோடி தான். இது எந்த வகையில் நியாயம். இதே நேரத்தில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத்துக்கு மட்டும் கேட்காமலேயே அள்ளி அள்ளி கொடுக்கிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்று தான் கேட்கிறோம். நான் ஒரு தமிழச்சி என்று சொல்லும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்ன செய்தார்? அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு ஆர் எஸ் பாரதி கூறினார்.