ஒன்றிய அரசின் இந்த “அற்ப செயலை” வன்மையாகக் கண்டிக்கிறோம்: சு வெங்கடேசன்!

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் “அற்ப சிந்தனை” என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும், ஒன்றிய அரசின் இந்த “அற்ப செயலை” வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் பியூஸ் கோயல் கருத்துக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் பதில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. மாநிலங்கள் அளிக்கும் வரி பகிர்வுக்கு ஏற்ப நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதாவது, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசு ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தமிழக அரசு இந்த திட்டத்தில் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியது பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்திலும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசை கடுமையாக சாடியிருக்கிறார். சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

நிதிப்பகிர்வில் தங்களுக்குரிய நிதியை மாநிலங்கள் கேட்பது அடிப்படை உரிமையே! தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதால் தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்துள்ளது ஒன்றிய அரசு. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் “அற்ப சிந்தனை” என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசின் இந்த “அற்ப செயலை” வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ”மாநிலங்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது என்பது அற்ப சிந்தனை” என்று தெரிவித்துள்ளார்.