விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: தமிழக வெற்றிக் கழகம்!

விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “2026-ல் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையலாம்; அமையாமலும் போகலாம். கூட்டணி தொடர்பான முடிவு அந்த நேரத்தில்தான் எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.