பிப். 11ல் பணி நிரந்தரம் கோரி தலைமைச் செயலகம் முன் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்!

டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகள் மீது அரசு நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து சில்லறை மதுபான வியாபாரத்தை, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நேரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் சில்லறை மதுபானப் பிரிவுப் பணியாளர்கள், கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்தும் அவர்களுக்கு பணி நிரந்தரமோ, பணிக்குரிய ஊதியமோ, சமூக பாதுகாப்போ எதுவும் இல்லை.

மிகக் குறைந்த தொகுப்பூதியத்தை அவர்களுக்கு வழங்கி வரும் அதே வேளையில், கடைகளில் நிர்வாக பராமரிப்பு செலவுகள் அனைத்தும் அவர்கள் தலை மீது சுமத்தப்படுகிறது. சமூக விரோதிகள் கடைகளை உடைத்து விற்பனை தொகையை திருடுவதும், பணத்துக்காக பணியாளர்களை கொலை செய்வதும் நடக்கிறது.

பணியாளர்களை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகள், அவர்களை சுரண்டி ஒழுங்கீனங்கள் அதிகரிக்க காரணமாகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படும் சூழலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோரிக்கைகளாக அரசுக்கு சமர்ப்பித்தும் அவை கண்டு கொள்ளப்படவில்லை.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படியான உரிமையை கூட அவர்கள் பெறமுடியாதபடி அரசு நடத்தி வருகிறது.

எனவே அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு தொழிற்சங்க இயக்கத்தின் பிதாமகன், சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 79-வது நினைவு தினமான 11.02.2025-ல், தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட பணியாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அறிவித்துள்ளன.

பிப்ரவரி 11ல் காலை 10 மணிக்கு சென்னை, எழுப்பூர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி புறப்படும் பணியாளர்கள் ஊர்வலத்தை தமிழ்நாடு ஏஐடியூசியின் துணைத்தலைவர் இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி) தொடக்கி வைக்கிறார்.

டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை மேலும் தள்ளிப் போடாமல் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துவதுடன் பணியாளர் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.