இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்: கபில் சிபல்!

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியுள்ளார்.

இதுகுறித்து கபில் சிபல் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி, மற்ற கட்சிகளுடன் இணைந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறது. மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புடன் முன்னேறவும் முயற்சிக்கிறது. சில நேரங்களில் சிக்கல்கள் இருப்பது உண்மைதான். பிகாரில் கடந்த 2020 தேர்தல் கூட்டணியில் காங்கிரஸுக்கு சில தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கூட்டணி காரணமாகவே ஆட்சிக்கு வர முடியவில்லை என்று ஆர்ஜேடி கூறியது. ஆனால் பாஜகவை தோற்கடிக்க, அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இந்தியா கூட்டணிக் கட்சியினர் பேசி முடிவு செய்ய வேண்டும்.

சமீபத்தில் தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஆளுமையின் கீழ் அந்த கட்சி செய்லபடுவதால் வெற்றி எளிதாகிறது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாட்டில் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் பலன் கிடைத்தது. எனவே, மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணிக் கட்சியினர் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும்.

சரத் பவார், ‘இந்தியா கூட்டணி ஒரு தேசிய கூட்டணி, மாநிலக் கூட்டணி அல்ல, நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமே இது பொருந்தும், மாநிலத் தேர்தல்களுக்கு பொருந்தாது’ என்று கூறியிருந்தார். ஆனால், மாநிலக் கட்சிகள், தங்களது மாநிலம் கடந்து கால்பதிக்க வேண்டும், அதேபோல தேசிய கட்சிகள், தாங்கள் கால் பதித்த இடங்கள் குறையக்கூடாது, அதிகரிக்க வேண்டும். இதற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தில்லி பேரவைத் தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி இணைந்து போட்டியிருந்தால் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக, ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.