ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் அக்கட்சி நிர்வாகிகள் சாரை சாரையாக கார்களில் வந்து சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக செங்கோட்டையன், ஒவ்வொரு நாளும் என்னை 100, 200 பேர் நேரில் வந்து சந்திப்பது வழக்கம்தான் என்று பதில் அளித்துள்ளார்.
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிப்.9ல் கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்ற நிலையில், மூத்த தலைவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. எங்களை வளர்த்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்களை இல்லாததால், அந்த விழாவில் பங்கேற்பதை புறக்கணித்தேன். ஏனென்றால் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை கொண்டு 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா நிதி ஒதுக்கினார் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே முன்னாள் எம்பி கோகுல இந்திரா குற்றம்சாட்டி இருந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதனால் செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையே மிகப்பெரிய மோதல் ஏற்படுமோ என்ற பேச்சுகள் அடிபட தொடங்கின. இந்த நிலையில் இன்று காலை முதலே கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனை சந்திக்க ஏராளமான கார்களில் அதிமுகவினர் வந்தனர். இதன் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க தொடங்கிவிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது. இதற்காக தான் தனது ஆதரவாளர்களை வீட்டிற்கு அழைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வீட்டிற்கு அதிமுகவினர் வருவது சாதாரணமான ஒன்றுதான். 100, 200 பேர் ஒன்றாக தான் வருவார்கள். இன்று கோபிச்செட்டிப்பாளையம், நாளை அந்தியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க வந்தனர். என் வீட்டிற்கு நிர்வாகிகள் வருவார்கள், சாப்பிடுவார்கள். எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது அதோடு முடிந்தது. ஆள விடுங்க என்று தெரிவித்தார்.