மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்தார். இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியானாவில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வென்று விட்டது. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இல்லை. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும். நமக்கு நாம் மட்டுமே போதும். தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய அளவில் பாஜகவை கட்டுப்படுத்துவது இண்டியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும்” என்றார்.
இந்நிலையில் மம்தாவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் நேற்று மும்பையில் கூறும்போது, “இண்டியா கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கவேண்டும். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.