பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மறைந்தார். அவரது புகழைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்டது. புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அதேபோல் மெரினா கடற்கரையில் அனைவரையும் போல மாற்றுத் திறனாளிகளும் மணல் பரப்பில் வீல் சேருடன் கடல் அருகே சென்று அதன் அழகை ரசிக்கும் வகையிலும், கடல் நீரில் கால் நனைக்கும் வகையிலும், கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் சிறப்பு பாதை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் இதுபோன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள கார்ல் ஸ்மித் நினைவுச் சின்னம் அருகே, மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ.1.61 கோடியில் சிறப்பு பாதை அமைக்கும் பணிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நடைபாதை பாலமானது 190 மீட்டர் நீளம், 2.80 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை விரைவில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.