டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல பிகாரில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்றும், அக்கட்சி தூக்கி எறியப்படும் என்றும் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. டெல்லி தேர்தல் வெற்றியை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில் நடைபெற உள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் டெல்லியின் முடிவுகள் எதிரொலிக்கும் என்றும், அங்கும் பாஜக வெற்றி பெறும் என்றும் அக்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும் நம்புகின்றனர்.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், “டெல்லி தேர்தல் முடிவின் தாக்கம் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது. இங்கு அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். நாங்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) இங்கே இருக்கும் வரை பாஜக பிகாரில் அரசாங்கத்தை அமைக்க முடியாது. மக்கள் பாஜகவையும் உங்களையும் (ஊடகங்களை) புரிந்து கொண்டுள்ளனர்” என தெரிவித்தார். அப்படியானால், பிகாரில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த லாலு பிரசாத் யாதவ், “தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பார்” என்று கூறினார்.
லாலு பிரசாத்தின் இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள பிகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, “லாலு பிரசாத் வருவாரா மாட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் என்டிஏ மீண்டும் வரும் என்பது உறுதியாகத் தெரிகிறது. மாநிலத்தை அழித்து, ஊழலில் ஆழமாக வேரூன்றிய லாலு பிரசாத் போன்ற ஒருவர் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.