வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக, இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கடும் அமளிக்கு இடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம் செய்தார்.
புதிய வருமான வரி மசோதாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது அதிருப்திக்குரிய அம்சங்கள் குறித்தும் பகிர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த மசோதாவை மக்களவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு சபாநாயகரை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். அந்தக் குழு, புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்.
புதிய வருமான வரியை அறிமுகம் செய்த பின்னர் அது குறித்து எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த பதிவில், “புதிய வருமான வரி மசோதா (2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று வரை திருத்தப்பட்ட சட்டத்தின் மொழியை எளிமையாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் மசோதாவின் நகல் காணக் கிடைக்கும். எங்களின் FAQ விளக்கங்கள் பொதுவாக எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது உள்ள வருமான வரி சட்டம் 1961, கடந்த 60 ஆண்டுகளில் எண்ணற்ற திருத்தங்களைக் கண்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் அதிக சுமைகளை தாங்கி விட்டது; இதன் மொழி மிகவும் சிக்கலானதாக உள்ளது; வரி செலுத்துவோருக்கு அதிக செலவு தருவதாய், நேரடி வரி நிர்வாகத்தின் திறனுக்குத் தடையாய் இருக்கிறது.
வரி நிர்வாகத்தினர், வரி நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கட்டுமானம் மற்றும் சிக்கல்கள் குறித்து கவலை எழுப்பி உள்ளனர். ஆகவே, எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான சுருக்கமான சட்டம் உருவாக்க, வருமானவரிச் சட்டம் 1961 முழுவதுமாக மீள்பார்வை செய்யப்படும் என்று ஜூலை 2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும் 12 மாதங்களை குறிப்பதாகும். அதன்படி இது, நிதியாண்டின் கட்டமைப்போடு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2024-25 நிதியாண்டில் சம்பாதித்த வருமானம் அடுத்த நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது. இந்த புதிய வரிமுறையில் 2025-26 மதிப்பீட்டு ஆண்டாக இருக்கும். மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை அடிக்கடி சட்ட மாற்றங்கள் தேவையின்றி செயல்படுத்தவும் இப்புதிய மசோதா அனுமதிக்கும்.
இதனிடையே, வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை மார்ச் 10-ம் தேதி கூடும்.