ராஜ்யசபாவில் நடந்த மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என்று நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் பீகார் மாநிலத்தின் பெயர் அதிகமாக இடம் பெற்றிருந்தது. இதனை சுட்டிக்காட்டி அப்போதே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில எம்பிக்கள் மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தார்கள். இதனிடையே நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மத்திய பட்ஜெட் மீது விவாதங்கள் நடந்தது. அப்போது தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் ஒதுக்கவில்லை என்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டினார்கள். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு ஆவேசமாக பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறும் போது, “மத்திய பட்ஜெட் குறித்து ஒரு மாநிலத்துக்கு மட்டுமான பட்ஜெட்டா? பீகாருக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் பட்ஜெட்டா? வேறு எந்த மாநிலத்துக்கும் எதுவும் வழங்கவில்லையா? இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். நானும் தொடர்ந்து அவர்களுக்கு பதிலளித்து வருகிறேன். பீகார் அல்லது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதாக கூறுவது அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து இந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எந்த கட்சி ஆளும் மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவே இல்லை.. மதிப்பீடுகள் அல்லது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட கடுமையான வெளிப்புற சவால்களுடன், ஒரு சவாலான நேரத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த தேசத்தின் நலன்களை மிக முக்கியமாகக் கருதி, மதிப்பீட்டை முடிந்தவரை துல்லியமாக வைத்திருக்க அரசு முயற்சித்திருக்கிறது.
இந்த முறை பட்ஜெட் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்றால், நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வளர்ச்சி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை பட்ஜெட்டில் துறை ஒதுக்கீடுகளைக் குறைக்கவில்லை. அடுத்த நிதியாண்டில் பயனுள்ள மூலதனச் செலவு ரூ.19.08 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளில், இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவீதம் உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது”என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதனிடையே மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ராஜ்யசபாவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலடி கொடுத்து பேசிய நிர்மலா சீதாராமன், ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என்றும், தற்போது ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற உறுதுணையாக இருந்தது பிரதமர் மோடியின் அரசுதான் என்றும் கூறினார்.
அப்போது எதிர்கட்சிகள் பேசவிடாமல் அமளியில் ஈடுபட்ட நிலையில், மனதை திடப்படுத்திக்கொண்டு, நான் சொல்வதை கேட்டு, தமிழ்நாட்டில் சென்று பேசுங்கள் என நிர்மலா சீதாராமன் எம்பிக்களை அறிவுறுத்தினார். அப்போது மேலும் பேசிய நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை குறிப்பிட்டதுடன், தமிழ்நாட்டில் 4,100 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் புதிய விமான நிலையம், “பாரத் மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 பசுமைத் திட்டங்கள், சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு, தமிழகத்தில் PM ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 12 லட்சம் வீடுகள் திட்டம் ஆகியவை பற்றியும் பேசினார்.