பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் தவறு கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது: பாஜக!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தில் குற்றம் கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது என்று பாஜக கூறியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு விசயங்கள் இடம் பிடித்தன.

உங்களுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அதானி ஊழல் தொடர்பான பிரச்சினை இடம் பெற்றதா? என்ற கேள்விக்கு, வாஷிங்டனில் டிரம்புடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நமது கலாச்சாரம் உலகம் ஒரே குடும்பம் (Vasudhaiva Kutumbakam- வசுதைவ குடும்பகம்). உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியரும் என்னுடையவர் என்று நான் நம்புகிறேன். இரண்டு நாடுகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில், “நீங்கள் இந்தியாவில் வைத்து கேள்வி கேட்டால், அங்கே மவுனம்தான். நீங்கள் வெளிநாட்டில் கேள்வி கேட்டால், அது தனிபட்ட விசயம்! அமெரிக்காவில் கூட மோடி அதானியின் ஊழலை மறைத்தார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான ஷேசாத் பூனவல்லா பதில் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பூனவல்லா “26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணாவை இந்தியா கொண்டு வரப்படுகிறார். இதற்காக அமெரிக்காவை சம்மதிக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய ராஜாங்க ரீதியிலான வெற்றி. தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இந்தியா- அமெரிக்க உறவுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தியது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தில் குற்றம் கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது” என்றார்.