சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் மேலும் 119 பேர் இன்று இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அமெரிக்க ராணுவ விமானம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் வேலையில் அந்நாடு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை தேடிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்களை அவர்களது நாட்டுக்கே விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான இந்தியர்களும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்க ராணுவத்தினர் நடத்தியுள்ளனர். இயற்கை உபாதைகளை போக்கவும் வழியில்லாமல் தவித்துள்ளனர். இந்தியாவுக்கு திரும்பியவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசினர். இது தொடர்பாக இந்திய அரசு, அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் இரண்டாவது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 119 இந்தியர்களுடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ள விமானம் இன்று (பிப்ரவரி 15 ) இரவு 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பி அனுப்பப்படும் 119 இந்தியர்களில் 67 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர கோவா, மராட்டியம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா 2 பேர், இமாசலபிரதேசம் மற்றும் காஷ்மீரை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நாடு திரும்புபவர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது அவர்களது வருகைக்குப் பின்னரே தெரிய வரும்.