போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க கோரிக்கை!

போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என அமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, கூட்டுநர் த.பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், ஸ்டாப் கரப்ஷன், தொழில்நுட்ப பணியாளர்கள், திருவிக உள்ளிட்ட 74 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சங்கத்தினருக்கும் சுமார் 15 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது, பெருவாரியான சங்கங்கள் தரப்பில் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினர்.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வர் அலுவலகத்தில் பரிசீலித்து விவாதிக்கப்படும். சில கோரிக்கைகளை நிதித்துறையுடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது. சிலவற்றை முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்று எவற்றை நிறைவேற்ற முடியுமோ, அதனை நிறைவேற்றுவோம். இது தொடர்பாக அடுத்த கட்டமாக அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைத்து பேச்சுவார்த்தை நடைபெறும். அதன் பிறகு ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.