நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த புதுக்கோட்டை முத்துக்குமார் படுகொலையின் பின்னணியில் உள்ள கும்பல்- சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் சமூக செயற்பட்டாளர் ஜெகபர் அலி (ஜாபர் அலி) படுகொலை செய்யப்பட்டார் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளோம். தமிழ்த் தேசிய போராளி புதுக்கோட்டை முத்துக்குமாரின் 14-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இத்தகைய தமிழ்த் தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற நிகழ்வுகளுக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும்; இந்த கூட்டத்துக்கு கூட சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி பெற்றுள்ளோம்.
பிரபாகரன், வீரப்பனுடன் முத்துக்குமார் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக நின்றவர் முத்துக்குமார்; தமிழ்த் தேசிய களத்தில் தம்மை ஒப்படைத்து நின்ற போராளி. பிரபாகரனின் பாதுகாப்பு அரணாக நின்றவர்களில் ஒருவர்; சந்தனக் காட்டு வீரப்பனுடன் இருந்தவர். அத்தகைய போராளி முத்துக்குமார் அரசு துணையோடு அல்லது அரசியல்வாதிகள் துணையோடு அல்லது படுபாதகர்கள் துணையோடு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இன்று இணைய இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியில் பயணித்த தமிழ்த் தேசிய போராளி, புதுக்கோட்டை தனசேகரன் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். அவரை ஆரத்தழுவி வரவேற்று எங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறோம். தமிழ்நாடு முழுவதும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள், பிரபாகரனை உயிராக நேசிக்கக் கூடியவர்கள், தனி மனித ஒழுக்கம் உள்ளவர்கள், மாற்று அரசியல் மீது உண்மையான நம்பிக்கை கொண்ட இளையோர் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
திருச்சி மண்டல நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராக இருந்த வழக்கறிஞர் திருச்சி பிரபு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைய இருக்கின்றனர். முத்துக்குமார் கொலை- உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் புதுக்கோட்டை முத்துக்குமார் படுகொலை வழக்கின் சதிகாரர்கள், அரசியல் ரீதியாக பழிதீர்க்க வேண்டும் என்று நினைத்த கும்பல் அவரை படுகொலை செய்திருக்கிறது. உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளன. இதனால் வரும் காலங்களில் கூட்டுத் தலைமையாக செயல்பட்டு ஆலோசித்து அடுத்த கட்ட நகர்வுகளை அறிவிப்போம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் நடத்தியவர் முத்துக்குமார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் பயிற்சி பெற்றவர் ; பின்னர் சந்தனக் காட்டில் வீரப்பனுடன் இணைந்து நின்றார். நாம் தமிழர் இயக்கம் உருவாக்கப்பட்ட போது சீமானுக்கு மூத்தவராக இருந்தவர் புதுக்கோட்டை முத்துக்குமார். ஆனால் திடீரென முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை சம்பவம் இன்னமும் மர்மமாகவே நீடித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- நடிகை விஜயலட்சுமி வழக்கில் வரும் 19-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. இந்த நிலையில் சீமான் இயக்கம் மற்றும் கட்சியின் மூத்தவராக இருந்த முத்துக்குமார் படுகொலை தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசிவருகிறார்.