தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆலோசனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு எவ்வளவு நிதி வரவேண்டும், இந்த நிதி வராததால் என்ன மாதிரியான கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை விளக்கியதுடன் ஆவணங்களையும் வழங்கினர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:-
மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சிகள் தரப்பில் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு துறையின் அமைச்சர் என்ற முறையில் நன்றி. இந்த நிதி தொடர்பாக விளக்கங்களை துணை முதல்வரிடம் தெரிவித்து இருக்கிறேன். உடனடியாக முதல்வரிடம் இந்த தகவலை தெரிவித்து, நிதியை பெற சட்டரீதியாக அணுகலாமா அல்லது கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேசலாமா என அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை துணை முதல்வர் எடுக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் சமூக வலைதள பக்கத்தில், “தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார். நமக்கு வழங்க வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்ததோடு மட்டுமல்லாமல், மொழி திணிப்புக்கான முயற்சியையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு தரவேண்டிய நிதியை தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதுதொடர்பான ஆவணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் சமர்ப்பித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.