இந்தியாவுக்கு வழங்கிவந்த அமெரிக்க அரசின் 21 மில்லியன் டாலர் நிதி நிறுத்தம்!

கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறைக்கான தலைவராக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்கை கடந்த மாதம் தேர்வு செய்தார். நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் இதன் நோக்கம். அதன்படி (DOGE – The Department of Government Efficiency ) பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் சமீபத்திய ஒன்றுதான் இந்த நிதி ரத்து அறிவிப்பு.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமெரிக்க வரிசெலுத்துவோரின் டாலர்கள் பின்வரும் வகைகளுக்கு செலவிடப்பட இருந்தன. அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், மால்டோவா நாட்டுக்கான 22 மில்லியன் டாலர் மற்றும் இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டாலர் உட்பட பல்வேறு நாடுகளுக்கான நிதி நிறுத்தம் விவரம் இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு சில நாட்களுக்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனது அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்கை சந்தித்தார். அப்போது இருநாட்டு தலைவர்களும் இந்தியா – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஸ்பேஸ் எக்ஸின் தலைமை செயல் அதிகாரி மஸ்க், தனது மூன்று குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இதில் உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு நிதி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க சுமார் ரூ.200 கோடியை வழங்கியதாக அமெரிக்க அரசு கூறுகிறது. இந்த நிதியை பெற்றவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வங்கதேசம், நேபாளம் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் அமெரிக்க அரசு வழங்கிய பணம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்தியாவில் யாரெல்லாம் பணம் பெற்றனர் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டில் தலைமை தேர்தல் ஆணையராக குரேஷி பதவி வகித்தார். அப்போது அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் அறக்கட்டளையுடன் குரேஷி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சோரஸின் அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசே பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியை பெற்றது யார்? இவ்வாறு அமித் மாளவியா கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக வட்டாரங்கள் கூறும்போது, “சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பதாக நீண்டகாலமாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்பட்டன. அந்த உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது” என்று தெரிவித்தன.