காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய். காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக செயலாற்றி வருகிறார். இவரது மனைவி எலிசபெத் கால்பர்ன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பு இருப்பதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறும்போது, “தேசிய பாதுகாப்பு தொடர்பான சில தீவிரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கால்பர்னுக்கும், பாகிஸ்தான் திட்டக் கமிஷன் ஆலோசகர் அலி தவுகீர் ஷேக் மற்றும் ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது மிகவும் கவலைக்குரியது. இதுதொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
இந்த குற்றச்சாட்டு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கால்பர்னுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும். தேவைப்பட்டால் எலிசபெத்திடமும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.