திண்டுக்கலில் வழக்கறிஞர் மீது அமைச்சரின் பாதுகாவலர் தாக்குதல்!

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர்களில் ஒருவர் வழக்கறிஞர் உதயகுமாரை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு திடீரென அடுத்தடுத்து 3 இடங்களில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

திண்டுக்கல் துணை ஆட்சியர் அலுவலக சாலையில் பிரசித்தி பெற்ற கான்வென்ட் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் அருகே திமுகவின் மாவட்ட கட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் கான்வென்ட் பள்ளிக்கூடம் முன்பாக இருந்த பெரிய புளியமரம் சில நாட்களுக்கு முன் வெட்டப்பட்டது. அப்பகுதியில் மின் கம்பிகள் மீது புளியமரத்தின் கிளைகள் உராய்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்களைத் தெரிவித்ததால் இந்த புளியமரம் வெட்டப்பட்டது. ஆனால் வெட்டப்பட்ட புளியமரத்தின் கிளைகள் அகற்றப்படாமல் அதே இடத்திலேயே இருந்தது. இதனால் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் மாணவியரை பள்ளி கொண்டு வந்து விடுவதிலும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதிலும் பெற்றோர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த உதயகுமார் என்ற வழக்கறிஞரின் குழந்தைகளும் கான்வென்ட் பள்ளியில் படிக்கின்றனர். ஆகையால் வெட்டப்பட்ட புளியமர கிளைகளை உடனே அகற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்துகக்காக மாவட்ட தலைமை அலுவலகம் வந்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வழக்கறிஞர் உதயகுமார் முறையிட சென்றார். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர் உதயகுமாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதத்தின் போது தாம் தாக்கப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு உதயகுமார் தகவல் கொடுத்தார் இதனையடுத்து கான்வென்ட் பள்ளிக்கூடம் அருகே உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகம் முன்பாக குவிந்த வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை முன்பாகவும் அடுத்தடுத்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் நேற்று இரவு திண்டுக்கல் -திருச்சி சாலையில் வாகனப் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதனிடையே வழக்கறிஞர் உதயகுமார் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல்லில் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகமும் பரபரப்பாக காணப்படுகிறது.