ரேஸ் கிளப் மைதானத்தில் நீர் நிலை அமைக்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரேஸ் கிளப்பில், குதிரை பந்தய சுற்றுப்பாதையின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இதனை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வந்தது. ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களை சீல் வைத்துள்ளது. இதனை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் குளங்கள் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கிளப் உறுப்பினர்கள், இந்த கோல்ஃப் மைதானத்தில் விளையாடி வந்ததாகவும், மைதானத்தை பராமரிக்க ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் செலவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1951ம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் கிளப் ஹவுஸ் கட்டியுள்ளதாகவும், அங்குள்ள சமையலறை, மனமகிழ் மன்றம், மதுபான பாரில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இந்த வசதிகளை 500 உறுப்பினர்கள் வரை வழக்கமாக பயன்படுத்தி வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழமையான மூன்றாவது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து, நீர்நிலை அமைப்பதற்காக தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த சேதத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் , அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. இதே கோரிக்கையுடன் உரிமையியல் வழக்கையும் ஜிம்கானா கிளப் தரப்பில் தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தில் கோல்ப் மைதானம் அமைத்துள்ளதால், நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும் முன் ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீசும் அளிக்க அவசியமில்லை. இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.