தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வழக்கு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ் குமார் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது. ஆனால், மத்திய அரசின் தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க இருப்பதால் புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நாளை பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் இன்று ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர் நியமன தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டிருக்கிறார்; தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை பட்டியலில் 41-வது இடத்தில் உள்ளது; இதனை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டி உள்ளார்.