தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, முஸ்லிம்களின் வாக்குகளை விஜய் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்துடன் சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தார். இதுகுறித்து வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியதாவது:-
முஸ்லிம்களை திமுக தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இடஒதுக்கீடு தருவோம், வக்பு சொத்தை மீட்டுத் தருவோம் உள்ளிட்ட வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. அனைத்து மதத்தினரும் அன்பாக வாழும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவைப் பார்த்து திமுக பயப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எதிரிகள் என்று கூறியுள்ள விஜய், முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறார்.
அவரது கட்சி மாநாட்டில் முஸ்லிம் பெண்மணியை புர்கா அணிந்து அமரவைத்து பெருமை சேர்த்தார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். கோவையில் தனது கட்சி சார்பில் இஸ்லாமியரை மாவட்டச் செயலாளராக அறிவித்துள்ளார். எனவே, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். வரும் தேர்தலில் இந்த ஆதரவு தொடரும். நிச்சயம் முஸ்லிம்களின் வாக்குகளை விஜய் பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.