நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’எனும் அன்புச் சொல் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கோவையில் 17வயது மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், அமைச்சர் ரகுபதி எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
கோவைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிற விவகாரத்தில் குற்றத்தோடு தொடர்புடைய 7 மாணவர்கள் உடனடியாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனையை திராவிட மாடல் அரசு பெற்றுத்தரும். பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து பெண்களைப் பாதுக்காக்கவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டங்களை கடுமையாக்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் காரணமாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையாலும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கான திராவிட மாடல் அரசு எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை நாட்டு மக்கள் அறிவார்கள். பெண்களைப் படிக்கவிடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் சிறுபுத்தியோடு பழனிசாமி முன்னெடுத்த விஷமப் பிரசாரம் திராவிட மாடல் அரசின் துரித நடவடிக்கைகளால் பிசுபிசுத்துபோனது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துவரும் தமிழ்நாடு அரசை நேற்றைய தினம் உயர்நீதி மன்றமே பாராட்டியுள்ளது. பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதல-அமைச்சர் இடம் தரமாட்டார். பெண்களுக்கு முதல்-அமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல். அதை உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் அற்ப வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல்படுங்கள் பழனிசாமி. பெண்களை அச்சுறுத்த நினைத்து அற்ப அரசியல் செய்யாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.