டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக தலித்தை நியமிக்க வேண்டும்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இதில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்தனர். இதையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆம் ஆத்மி எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, அக்கட்சியின் அதிருப்தி தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஸ்வாதி மாலிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் தலித சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக நியமிக்கப்படுவார் என கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது தலித் எம்எல்ஏ ஒருவரை டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்து பாபாசாஹிப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவீர்கள் என நம்புகிறேன். சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த நடவடிக்கை அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.