அ.தி.மு.க.வில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் யாரும் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் வெளியில் வந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் அ.தி.மு.க. பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கும்போது, ‘மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு, தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடையாது. காரணம் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தை பார்க்க வேண்டும். நான் (ஆர்.பி.உதயகுமார்) மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கும் தேர்தல் பொறுப்பாளர் பதவி இல்லை. அ.தி.மு.க.வில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் யாரும் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை’ என்றார்.