டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். புதிய முதல்வரை தேர்வு செய்ய முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத், பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கட் ஆகியோர் மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டன. அதேநேரம் டெல்லிக்கு பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று மாலை 7 மணியளவில் டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பார். காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கும். முதல்வருக்கு, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜக ஆளும் 21 மாநிலங்களின் முதல்வர்களும், துணை முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் பங்கேற்க ஆட்டோ டிரைவர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு பாஜக மேலிடம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள் சுமார் 50 பேரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாலிவுட் பாடகர் கைலாஷ் கேரின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில், பல முக்கிய விவசாய தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்களை மேடையில் அமரவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆளும் கூட்டணியின் பலத்தை காட்டுவதற்கு பாஜக விரும்புகிறது.
இதற்கிடையே டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை நேற்று இரவு சந்தித்த ரேகா குப்தா மற்றும் பாஜக தலைவர்கள், ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோரினர்.
ஹரியானாவின் ஜுலானா பகுதியில் 1974-ல் பிறந்தவர் ரேகா குப்தா. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தலைவராகவும், பொதுச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் 2007, 2012-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பட்டப்படிப்பு படிக்கும்போதே அரசியலில் ஈடுபட்டு துணிச்சலான பெண் என்று பெயர் பெற்றவர் ரேகா குப்தா. டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு 29,205 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பந்தனா குமாரியைத் தோற்கடித்தார். டெல்லியின் 9-வது முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெற உள்ளார். மேலும் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெறுவார். ஏற்கெனவே டெல்லி முதல்வர்களாக சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்சித், ஆதிஷி மர்லேனா சிங் ஆகியோர் இருந்துள்ளனர்.