உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை” என சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்யமூர்த்தி என்பவர், தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி அண்மையில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது எனத் தெரிவித்தார். அதிமுகவில் உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி தீர்ப்பளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தச் சூழலில் தற்போது தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. சூரியமூர்த்தி அதிமுக அடிப்படை உறுப்பினர் இல்லை; அவரின் மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது” என இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.