இந்தி மொழியை தேவையெனில் கற்றுக் கொள்ளலாம்: சீமான்!

மூன்று மாநிலங்களில் மட்டும் பேசக்கூடிய இந்தியை, நாடெங்கும் திணிக்க முயற்சிப்பது தவறு. இந்தி மொழியை தேவையெனில் கற்றுக் கொள்ளலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதலில் இந்தியை திணித்தது காங்கிரஸ்தான். அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக நாட்டைத் துண்டாடத் துடிக்கிறது. இந்தியை ஏற்க வேண்டுமானால், மொழிவாரியாக மாநிலங்கள் எதற்காகப் பிரிக்கப்பட்டன?

இந்தி மொழியைப் பயில என்ன சிறப்புக் காரணம் உள்ளது? மூன்று மாநிலங்களில் மட்டும் பேசக்கூடிய இந்தியை, நாடெங்கும் திணிக்க முயற்சிப்பது தவறு. இந்தி மொழியை தேவையெனில் கற்றுக் கொள்ளலாம். ஆனால், திமுக முழுமனதுடன் இந்தியை எதிர்க்கிறதா? இந்தி படித்தால் வளர்ச்சி அடையலாம் என்கிறார்கள். பிறகு ஏன் வட மாநிலங்களில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் தமிழகத்துக்கு வேலைக்காக வருகிறார்கள்? நேர்மையாக கட்சி நடத்துவதற்காக, நான் சர்வாதிகாரிபோல செயல்படுகிறேன்.

ஐபிஎஸ் அதிகாரி வருண், அரசியல்வாதிபோல செயல்படுகிறார். அவர் என்னை தேவையில்லாமல் சீண்டுகிறார். அவர் மீது காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடம் பேசாமல், பெரியாரைப் பேசாமல் எங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது. ஆட்சி, அதிகாரத்தில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே நான் செல்லவில்லை. தமிழக வெற்றிக் கழகத்துடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது. இவ்வாறு சீமான் கூறினார்.