ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!

சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக சொன்னாலும், அத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ 7-வது மண்டல மாநாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு. தமிழகம் முழுவதிலும் 132 அரசுப் பள்ளிகளில் ரூ.177.38 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், உண்டு உறைவிட பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தின் கல்வித் தரத்தை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் மனமார பாராட்டியுள்ளனர். அதேநேரம், தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கின்றனர். நாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ரூ.2,152 கோடியை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை இது.

சமூகநீதிக்கும், தமிழுக்கும். தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்தை தரும். ‘இந்தியை திணிக்கிறார்கள்’ என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளியைவிட்டு துரத்தும் கொள்கை அது. 6-ம் வகுப்பு முதல் ‘தொழில் கல்வி’ எனும் பெயரில் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி, குலத்தொழில், சாதித் தொழில் என்று மனுநீதி சொல்லும் அநீதியை, படித்து முன்னேற நினைப்பவர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.

‘இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும்’ என்று சொன்னால்கூட நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2 ஆயிரம் கோடிக்காக இன்று நாங்கள் இதில் கையெழுத்திட்டால் நம் தமிழ் சமுதாயம் 2 ஆயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி சென்று விடும். அந்த பாவத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

இந்தியாவில் சுமார் 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. ‘இந்தி பெல்ட்’ எனப்படும் மாநிலங்களில் மட்டும் 25 மொழிகள் அழிந்துள்ளன. தாய்மொழியை இழந்து இந்தி ஆதிக்கத்துக்கு பலியான மாநிலங்கள் இப்போதுதான் மெல்ல விழிப்படைந்து வருகின்றன.

நிதியை தருமாறு கேட்டால், ‘தமிழ் மீது பிரதமருக்கு அக்கறை இருக்கிறது’ என்கிறார் மத்திய அமைச்சர். அவர்களது அக்கறை தமிழுக்கு என்ன செய்தது? சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.1,488 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இதுதான் நீங்கள் தமிழை வளர்ப்பதா?

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. இந்தியும் எங்களுக்கு எதிரி இல்லை. இந்தி பயில வேண்டும் என நினைப்பவர்களை தமிழகம் ஒருபோதும் தடுத்தது இல்லை. ஆனால், இந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். மீறி திணித்தால். ‘தமிழர் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதை தமிழகம் காண்பித்துவிடும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அவர் 77 முறை ஆய்வு நடத்தியதை விளக்கும் காட்சிகள் கொண்ட ‘234/77 ஒருமைக்கண்’ செயலி, தமிழ்நாடு பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் ‘அப்பா’ எனும் செயலி ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தை திறந்து வைத்து, மாநாட்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சிவசங்கர், கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.