‘அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை தான் மக்கள் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவு செய்வர். திராவிட வரலாற்றில் இரு மொழிக் கொள்கை தான் உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து நான் முதல்வராக இருந்தபோதும் இருமொழிக் கொள்கைக்கு தான் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதிமுகவின் தூய தொண்டர்கள் யாரும், எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள் என்பது வரலாறு. ஓர் அரசியல் கட்சி எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை கணித்து மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவர். விஜய் இதுவரை தேர்தலில் நின்று மக்கள் தீர்ப்பை பெறவில்லை. மக்களின் தீர்ப்புக்கு பின்னர் தான் அவரது கட்சி பற்றி கருத்து சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.