கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
தேவகோட்டையைச் சேர்ந்த பஞ்சநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தேவகோட்டையில் வள்ளி விநாயகர் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். தேவகோட்டை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்களும் ஊருணி வடகரையில் கொட்டி வருகின்றனர். தமிழ்நாடு நகரப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின்படி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்பே குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவது சட்டவிரோதம். குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊருணியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் இன்று (பிப்.24) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருன் சாமிநாதன், ஊருணியில் குப்பைகள் கொட்டப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிபதி, “மதுரை அமர்வுக்கு வந்ததில் இருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சைக்கிள் பயிற்சி செய்து வருகிறேன். அப்போது சாலையில் இரு பக்கத்திலும் குப்பைகள் குவிக்கப்பட்டிருப்பதும், அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. மதுரை கோயில் நகரம் என அழைக்கப்படும் சூழலில், தற்போது மதுரை குப்பை நகரமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. இதை உள்ளாட்சி அமைப்புகள் கண்டும் காணாமல் இருக்கிறது. குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். வள்ளி விநாயகர் ஊரணி குப்பைகளை கொட்டி மாசுப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. எனவே, தேவகோட்டை நகராட்சி ஆணையர், ஊருணியை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை மார்ச் 10-க்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.