பாஜகவில் இருந்து நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகுவதாக அறிவிப்பு!

பாஜகவில் இருந்து நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகுவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ரஞ்சனா நாச்சியார் விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் பாஜகவின் கலை, பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தார்.

இதுகுறித்து ரஞ்சனா நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடை பெறுகிறேன்.. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாஜகவில் இருந்து விடை பெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன். தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கிற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றிவிடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன்.

தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு, தமிழகம் வேறு என்கிற மாற்றான்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது. என்னை பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை திணிப்பு திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக் கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை.

இதுவரை பாஜக வழங்கிய எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டிருந்தேன். ஆனால் என்னை சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது. பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம், அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது. எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி, பயணிக்கத் தொடங்கிவிட்டேன். எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும் பதவியை வாரி தந்தவர்களுக்கும் என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்னென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடன் பயணித்து என்னுடன் கடமையாற்றி என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி.. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில், புரட்சிப் பயணம் அது எழுச்சி பயணம் வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம்.. அன்புடன் ரஞ்சனா நாச்சியார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்தார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டி, மாணவர்களை படியில் இருந்து இறக்கிவிட்டு அவர்களை தாக்கியும் உள்ளார். மேலும் ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டையிட்டுள்ளார். இந்த காட்சிகள் வைரலான நிலையில் நடிகை ரஞ்சனா மீது அரசு பேருந்து ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து ரஞ்சனாவை மாங்காடு போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.