டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு!

டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ரோஹினி தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லிக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் ரேகா குப்தா உட்பட அனைத்து புதிய எம்எல்ஏ-க்களுக்கும் அர்விந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் விஜேந்தர் குப்தா பெயரை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்தார். இதை பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார். பின்னர் குரல் வாக்கு மூலம் விஜேந்தர் குப்தா பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், முதல்வர் ரேகா குப்தாவும் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷியும் மரபுப்படி விஜேந்தர் குப்தாவை அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர்.