தற்காலிக பணியாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு கணிப் பொறி உதவியாளராக தினக் கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன் முறை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என கடந்த 2020 நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் மாததிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்தது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.