நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரியார் குறித்து அவதூறாக இழிவாகவும் பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரது பேச்சுக்கு ஆதாரங்களை பெரியார் தொண்டர்கள் கேட்டும் பார்த்தனர்; நேரில் விவாதிக்கவும் அழைத்தனர்; ஆனால் சீமான் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் பங்களாவை முற்றுகையிடும் போராட்டத்தை பல்வேறு பெரியாரிய இயக்கங்கள் இணைந்து நடத்தின. போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்திற்கு பதிலடி தரும் வகையில் சீமான் வீட்டு முன்பாக கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் தாக்குதல் நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சிகள் திரண்டிருந்ததால் அப்போது பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தும் சீமானின் நீலாங்கரை பங்களா மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும், இந்த புகாரின் அடிப்படையில்தான் 10 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீமான் வீடு மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.