“தமிழக முதல்வர் கூட்டியுள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதிய தமிழகம் புறக்கணிக்கும்” என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ஆணையம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில், எதன் அடிப்படையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் 2026-ல் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் மக்களிடம் மத்திய அரசு உரிமையை பறிக்கிறது என்ற பொதுவான கருத்தை முதல்வர் உருவாகி வருகிறார்.
திமுக கூட்டணி எம்பிக்கள் 40 பேரும் என்ன செய்கின்றனர். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டியது தானே? இதனால் முதல்வர் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது.
செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. 10, 15 ஆண்டுகளுக்கு பிறகு மொழியே இல்லாமல் போய்விடும். விஞ்ஞான ரீதியில் மாணவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். குழந்தைகள் எத்தனை மொழி கற்க வேண்டும், எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை அந்த குழந்தையும், பெற்றோரும் தான் முடிவெடுக்க வேண்டும். திமுகவினர் பிள்ளைகள் இரு மொழிக் கொள்கையில் தான் கல்வி கற்கின்றனரா? இந்த விவரங்களை முதல்வர் பகிரங்கமாக வெளியிடத் தயாரா?
மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாமல் போனதால், தொகுதி வரையறை பிரச்சினையை முதல்வர் கிளப்பி வருகிறார். இதனால் முதல்வர் அழைத்து விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.