முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்: செல்வப்பெருந்தகை!

“மக்கள் தொகையை குறைத்ததற்காக தமிழகத்தை வஞ்சிக்கிற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிப்பது மிகப் பெரிய அநீதியாகும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய பாஜக அரசு மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை எந்தெந்த வகையில் வஞ்சிக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 2026-ம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் கடுமையாக பாதிக்கப்பட போகும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

இந்த அச்சத்தை உணர்ந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5-ம் தேதி 40 கட்சிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறேன். தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் மிக மிக முக்கியமான பிரச்சினை குறித்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1951-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6.02 கோடியிலிருந்து 2011-ல் 19.98 கோடியாகவும், மகாராஷ்டிரா 5.04 கோடியிலிருந்து 11.23 கோடியும், பிகார் 4.21 கோடியிலிருந்து 10.38 கோடியும், மத்தியப் பிரதேசம் 3 கோடியிலிருந்து 7.25 கோடியும், தமிழகம் 4.11 கோடியிலிருந்து 7.21 கோடியாக உயர்ந்திருக்கிறது. குடும்ப கட்டுப்பாட்டை நிறைவேற்றாத உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்கள் தொகை 1951-ல் இருந்து 3 மடங்காக உயர்ந்திருக்கிறது. அதனால், அதனுடைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய மறுசீரமைப்பின்படி 80-ல் இருந்து 143-ஆகவும், பிகார் 40-ல் இருந்து 79 -ஆகவும், ராஜஸ்தான் 25-ல் இருந்து 50- ஆகவும், மத்தியப்பிரதேசம் 29-ல் இருந்து 52-ஆகவும், மகாராஷ்டிரா 48-ல் இருந்து 76-ஆகவும், குஜராத் 26-ல் இருந்து 43-ஆகவும் உயருகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் எண்ணிக்கை 39-ல் இருந்து 49-ஆக உயருகிற வாய்ப்புதான் இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 63 தொகுதிகள் கூடுதலாகவும், தமிழகத்துக்கு வெறும் 10 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 848-ஆக உயர்த்துவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. அதற்காகதான் மக்களவையில் 888 பேர் அமரக்கூடிய வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திட்டமிட்டு கட்டியிருக்கிறார்.

1971-ல் மக்கள் தொகை 56 கோடியாக இருந்த போது 543 மக்களவைத் தொகுதிகள் என நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நிறைவேற்றிய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டிய போது 1976-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசமைப்புச் சட்டத்தில் 82-வது பிரிவை திருத்தியதன் மூலம் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தார்.

அதேபோல, வாஜ்பாய் அரசால் 2001-ம் ஆண்டுக்கு பிறகு மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 2007-08 ஆம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டன. அதேபோல, மறுவரை செய்யாமல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது.

அதற்கு மாற்றாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து மாற்றாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாருக்கு முறையே 11 தொகுதிகளும், 10 தொகுதிகளும் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறைவாக கிடைக்கிற வகையில் இழப்பு ஏற்படும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பது இந்திய அரசின் திட்டமாகும். அதை தீவிரமாக மேற்கொள்கிற மாநிலங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வந்தது. அதன் காரணமாகத் தான் தமிழகத்தில் 68.6 சதவிகித பெண்கள் குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை பயன்படுத்தியதற்காக கடந்த ஆகஸ்ட் 2022-ல் 36 மாநிலங்களிலேயே மிகச் சிறந்த மாநிலம் என்ற தேசிய விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் தேசிய விருது பெற்று, மக்கள் தொகையை குறைத்ததற்காக தமிழகத்தை வஞ்சிக்கிற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிப்பது மிகப் பெரிய அநீதியாகும்.

கடந்த காலங்களில் பிரதமர் இந்திரா காந்தி, பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் ஒவ்வொருவரும் 25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்புக்கு கால நீட்டிப்பு வழங்கி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்ததைப் போல, தற்போதைய மோடி அரசும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்பதன் மூலமே தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.

எனவே, வருகிற 5-ம் தேதி தமிழக முதல்வர் கூட்டியிருக்கிற அனைத்து கட்சி கூட்டத்தின் மூலமாக தமிழகத்துக்கு மக்களவையில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றுவதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.