டெல்லி பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தடை!

டெல்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கூறினார்.

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, டெல்லி பேரவையில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உயைற்றும்போது, இடையூறு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி உள்பட 21 எம்எல்ஏக்களை 3 நாள்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் முடிந்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இன்று காலை சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்றபோது, பேரவையின் வளாகத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அதிஷி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக அதிஷியின் எக்ஸ் பதிவில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ‘ஜெய் பீம்’ என்ற கோஷங்களை எழுப்பியதற்காக அவையிலிருந்து மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இன்று பேரவைக்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை. டெல்லி சட்டப்பேரவை வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு “சர்வாதிகாரத்தின் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.