அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்: மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் கைது!

அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திடீரென அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினேஷ்குமார். இவரின் மனைவி சுமிதா பேரூராட்சி 12ஆவது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் பிப்.25ஆம் தேதியன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதைத் தடுக்க முயற்சித்துள்ள மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கினர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, திமுக அரசின் கவனமின்மையை கண்டித்தும் அதிமுக தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக தரப்பில் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று தகவல் வெளியாகியது. அதற்கேற்ப அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருக்கழுக்குன்றத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்த ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறை கைது செய்ய முயற்சித்த போது, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அனுமதி இல்லாததால் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ. மரகதம் உள்ளிட்ட அதிமுகவினரை போலீஸார் அவரது வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றதால் போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருக்கழுக்குன்றம் நோக்கி வரும் அதிமுகவினரை, தடுத்து நிறுத்தி ஆங்காங்கு போலீஸார் கைது செய்து வருகின்றனர்.