பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் ரஷ்யா செல்கிறார்!

ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இது ரஷ்யாவில் ‘தி கிரேட் பேட்டிரியாட்டிக் வார்’ என அழைக்கப்படுகிறது. இதன் 80-ம் ஆண்டு வெற்றி தினத்தை மே 9-ம் தேதி, தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் அணிவகுப்பு பிரிவும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒத்திகைக்காக ஒரு மாதத்துக்கு முன்பே இந்திய ராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பை பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யா சென்றார். தற்போது இந்தாண்டு மே மாதம் அவர் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.