அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம்: தெலுங்கானா அரசு!

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10 ம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தி மொழி திணிப்பு சர்ச்சைகளுக்கு நடுவே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. CBSE, ICSE, IB என எந்த விதமான பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் இந்த விதி பொருந்தும். 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் தெலுங்கை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநில மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் எளிமையான முறையில் தெலுங்கு கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டே தெலுங்கு மொழி கட்டாயம் ஆக்கி தெலுங்கானாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. முந்தைய அரசு, தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் ஆக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று தற்போதுள்ள அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவு திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பஞ்சாப் கல்வி மந்திரி ஹர்ஜோத் பெய்ன்ஸ், தங்கள் பாடத்திட்டத்தில் பஞ்சாபி மொழியை ஒரு பாடமாக சேர்க்காத எந்தவொரு பள்ளிக்கும் அங்கீகாரம் மறுக்கப்படும் என்று கல்வி வாரியங்களை கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.