பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மார்ச் 6-ல் கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊதிய பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு இல்லாத நிலையில், அடுத்த மாதம் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி வழங்காதது தான் காரணம்.
அதேநேரம், கடந்த 2022-ம் ஆண்டு வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தி வரும் 6-ம் தேதி பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். அரசிடம் நிதி பெறுவது தான் அனைத்து பிரச்சினைக்குமான தீர்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.