உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.213.78 கோடியில் பெரியார் அரசு மருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
வடசென்னை மக்களுக்கு உயிர்காக்கும் மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை காலம் காலமாக செயல்பட்டு வந்துள்ளது. வடசென்னையை வளர்ந்த சென்னையாக்கும் வகையில் அரசு எடுத்துவரும் முயற்சிகளில் இந்த மருத்துவமனை ஒரு மைல்கல். சமூகத்தில் நிலவிய சமூக பிணிகளுக்கு மருத்துவம் பார்த்தவர் சமூக மருத்துவர் பெரியார். அந்த வகையில், மருத்துவமனைக்கு பெரியார் பெயரை சூட்டியதில், அவரது தொண்டனாக பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நம்பிதான் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அவர்களை, உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாருங்கள். பணிவோடு சிகிச்சை கொடுங்கள். சுத்தம், சுகாதாரத்துடன் மருத்துவமனை செயல்படுவதை உறுதி செய்யுங்கள். நான் கட்டாயம் வாரம் ஒருமுறையாவது இங்கு வந்து பார்வையிடுவேன். அதேபோல பொதுமக்களுக்கும் சுய ஒழுங்குடன் பொது இடங்களில் தூய்மையை காக்க வேண்டும்.
பொதுவாகவே, என் பிறந்தநாள் வரும்போது மக்கள் நலனுக்காக, என் மனதுக்கு நெருக்கமான திட்டங்களை தொடங்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். அந்த வகையில், ஆட்சிக்கு வந்தவுடன் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை 2022-ல் அறிவித்தேன். அத்திட்டத்தின் மூலம் இதுவரை 41 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, அதில் 2.60 லட்சம் இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் உயர் பணிகளுக்கு சென்றுள்ளனர்.
‘நான் முதல்வன் – உயர்வுக்கு படி’ திட்டம் மூலமாக, உயர்கல்வியில் இடைநின்ற 77 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2023-ல் விளிம்புநிலை மக்களுக்காக, மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது என்பதற்காக அதற்கான கருவிகளை தந்து, பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை அறிவித்தேன். அந்த திட்டம் மூலம் 202 பேர் தொழில் முனைவோர் ஆகியுள்ளனர். கடந்த 2024-ல் சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்த்துவைக்க, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
அந்த வகையில், இந்த ஆண்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் விதமாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நியமன முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் இடம் உறுதிசெய்யப்படும். அதிகாரம் பொருந்திய அவைகளில் மாற்றுத் திறனாளிகள் இடம்பெறுவார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.