சீமான் விவகாரத்தில் காவல் துறையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனரா என்ற கேள்விக்கு, சட்டத்தின் ஆட்சிதான் ஒட்டுமொத்த ஒன்றியத்திலும் நடக்கிறது. அதுவும் குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை நடத்துவதற்குத்தான் முதல்வர் ஸ்டாலின் அனுமதிப்பார்கள். சைத்தானின் ஆட்சிக்கு முதல்வர் அனுமதி அளிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். விஜயலட்சுமி சீமான் மீதான இந்தப் புகாரை கடந்த 2012 ஆண்டு திரும்பப் பெற்றுவிட்டார். ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 24 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஜனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, நடிகை பாலியல் வழக்கில் விசாரணைக்கு சீமான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒத்துழைக்காவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் நேற்று சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால், ஒட்டப்பட்டவுடனேயே அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் கிழித்தெறிந்தார்.
சீமான் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மன் கிழிக்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பானது. சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலாளிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்மன் நோடீஸை கிழித்ததாக சீமான் வீட்டில் பணியாற்றும் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரை சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
சீமான் விவகாரத்தில் தொடர்ந்து காவல் துறை மற்றும் அரசு அத்துமீறி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
சீமான் வீட்டில் காவலாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அதிகமாக கருத்து சொல்லி அவருக்கு விளம்பரத்தை ஏற்படுத்த நான் நினைக்கவில்லை. சட்டத்தின் ஆட்சிதான் ஒட்டுமொத்த ஒன்றியத்திலும் நடக்கிறது. அதுவும் குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை நடத்துவதற்குத்தான் முதல்வர் ஸ்டாலின் அனுமதிப்பார்கள். சைத்தானின் ஆட்சிக்கு முதல்வர் அனுமதி அளிக்க மாட்டார். ஆகவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எந்த நடவடிக்கையையும் துணிவாக எடுக்கக்கூடிய முதல்வர் ஆட்சியில், அதிகார அத்துமீறல் நடைபெறுவதற்கு அனுமதிக்க மாட்டார்.
பெரியாரைப் பற்றி பேசிய பிறகுதான் ஈரோடு மண் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சொந்தமானது என்று அந்த மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். எதிர்த்து நின்ற அனைவரையும் முன் வைப்புத் தொகையை இழக்கச் செய்திருக்கிறார்கள். சீமான் இன்னும் இன்னும் கூட பெரியாரைப் பற்றி பேசட்டும். நாங்கள் எங்கள் பணியின் வேகத்தை, மண்ணின் உரத்தை இன்னும் பலமாக்குவோம். நிச்சயமாக தமிழக முதல்வரோடு கூட்டணி வைத்துள்ள தமிழக மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு முதலமைச்சர் கூறிய 200 தொகுதியை தாண்டி ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள்.
இதுபோன்ற பல பேச்சுகளையும், ஏச்சுகளையும் கடந்து வந்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். இதுபோன்று பின்னால் பேசுபவர்களை குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. லட்சியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.
சம்மன் கொடுத்தாலும் ஆஜராக மாட்டேன் என்றும் சீமான் கூறியது குறித்த கேள்விக்கு, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அமைச்சர் பதிலளித்தார்.