தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். அப்போது நிர்வாகி ஒருவர் அவருக்கு பெரிய சிங்க சிலையை பரிசளித்தார். இந்த நிலையில் பெண் ஆய்வாளரின் கன்னத்தில் தாக்கிய திமுக நிர்வாகியிடம் இருந்து முதலமைச்சர் சிரித்துக் கொண்டே பரிசு பெற்றுக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் இன்று தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை அடுத்து அவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக திமுக முன்னாள் தலைவரும் அவரது தந்தையுமான கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது திமுக தொண்டர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேக் வேட்டி, புத்தகங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினர். அவற்றை இன்முகத்தோடு ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக பிரமுகரான ஸ்ரீதரன் முதல்வருக்கு மிகப்பெரிய சிங்கத்தின் சிலையை பரிசளித்தார். அதனை பெற்றுக் கொண்டு அவர்களுடன் நின்று முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பரிசு வழங்கிய திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ஆய்வாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தவர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவண்ணாமலை ஆலயத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியதோடு, அது தொடர்பான வழக்கில் தலைமறைவாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், தற்போது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கிறார். அதனை முதலமைச்சரும் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிறார்.
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரை, காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் வரவேற்புபசாரம் அளிப்பது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் என்ன வகையான செய்தியை வெளிப்படுத்துகிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா? தமிழகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், குற்றவாளிகள் சிறிதும் பயமின்றி உலாவுவதும், திமுகவின் நிழலில் இருப்பதால்தான் என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தேசூர் காவல் நிலைய ஆய்வாளரும், வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருமான காந்திமதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தத்தின் தம்பியும், திமுக முன்னாள் நகர் மன்ற தலைவரும், செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் தனது மனைவி சிவசங்கரியுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சுவாமிக்கு நேராக நின்று அவர் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மற்ற பக்தர்கள் சிரமம் அடைந்த நிலையில் விரைவாக தரிசனம் செய்துவிட்டு செல்லுமாறு ஸ்ரீதரிடம் ஆய்வாளர் காந்திமதி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் பெண் ஆய்வாளர் காந்திமதியை ஒருமையில் பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவியும் ஸ்ரீதரும் ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீதர் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஸ்ரீதர் தலைமறைவான நிலையில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் தற்போது முதலமைச்சரை அவர் சந்தித்த நிலையில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறி உள்ளது.