நடிகை விவகாரத்தில் சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு மார்ச் 3ல் விசாரணை!

நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் (மார்ச் 3) விசாரணைக்கு வர உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் மீது கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார். கருக்கலைப்பும் செய்தேன் என்று நடிகை கூறி வருகிறார். மேலும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நடிகை புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் சீமானின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதோடு பாலியல் புகார் தீவிரமானது.இதனை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது. போலீசார் விசாரித்து 12 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் வசிக்கும் நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் நேற்று இரவு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சீமானிடம் போலீசார் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர்.

இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‛‛இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதவிர விசாரணையை போலீசார் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சீமானின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சீமானின் மேல்முறையீட்டு மனு என்பது நாளை மறுநாள் (மார்ச் 3) ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிபி நாகரத்தினா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு என்பது விசாரணைக்கு வர உள்ளது.