நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எச்சரித்தார் டிரம்ப்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என்று தெரிவித்தார். இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறுக்கிட்டார்.
அப்போது டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பார்த்து, “நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்” என்று கோபத்துடன் தெரிவித்தார்.
மேலும் “உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது. நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள்.
போரில் நீங்கள் வெல்லவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும்” என்று அவர் கூறினார்
துணை அதிபர் வேன்ஸ், “கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கா விளாடிமிர் புதினின் உக்ரைன் படையெடுப்புக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதி, வளத்துக்கான பாதை ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவை நல்ல தேசமாக அடையாளப்படுத்துவது அது எப்போதும் ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையை கடைப்பிடிப்பதே. அதிபர் ட்ரம்ப்பும் அதையே செய்கிறார். ஆனால் ஜோ பைடனின் மோதல் போக்கு உக்ரைன் – ரஷ்யப் போரை மேலும் தீவிரமடையவே செய்தது.” என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெலன்ஸ்கி, “வேன்ஸ், நீங்கள் என்ன மாதிரியான ராஜதந்திர அணுகுமுறை பற்றி பேசுகிறீர்கள். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன?” என்றார்.
அதற்கு வேன்ஸ், “நான் உங்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ராஜதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறேன். நீங்கள் ஓவல் அலுவலகத்துக்கு வந்து அமெரிக்க ஊடகத்தினர் முன்னிலையில் இவ்வாறு பேசுவது அவமரியாதைக்குரிய செயல்.” என்றார்.
ஜெலன்ஸ்கி அப்போது, “போரின்போது எல்லோருக்கும் பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் உங்களுக்கு சாதகமான போக்கு இருப்பதால் நீங்கள் அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் நீங்களும் எதிர்கொள்வீர்கள்.” என்றார்.
அப்போது ஆவேசமாகக் குறுக்கிட்ட ட்ரம்ப், “நாங்கள் என்ன மாதிரியாக உணர்வோம் என்றெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாங்கள் உங்களின் பிரச்சினைகளை களையவே முயற்சிக்கிறோம்.” என்றார்.
அப்போது ஜெலன்ஸ்கி ஏதோ பேச முயல, மீண்டும் ஆவேசமாக குறுக்கிட்ட ட்ரம்ப், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடும் சூழலில் நீங்கள் இல்லை. நீங்கள் நல்ல நிலையில் இல்லை. நீங்கள் விளையாடும் துருப்புச் சீட்டுகூட உங்களிடம் இல்லை.” என்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெலன்ஸ்கி, “நான் இங்கே விளையாடவில்லை. நான் தீவிரமாகவே சொல்கிறேன்.” என்றார்,
அதற்கு ட்ரம்ப், “நீங்கள் விளையாடுகிறீர்கள். லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து சூதாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரை நடத்த நீங்கள் சூதாடுகிறீர்கள். நீங்கள் நடந்துகொள்ளும் விதம் தேசத்துக்கு அவமதிப்பு.” என்றார்.
அப்போது குறுக்கிட்ட துணை அதிபர் வேன்ஸ், “நீங்கள் ஒருமுறையாவது நன்றி சொன்னீர்களா?” என்று வினவினார், அதற்கு ஜெலன்ஸ்கி, ”நான் நிறைய முறை எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறேன்.” என்றார். அதற்கும் குறுக்குக் கேள்வியை தொடுத்த வேன்ஸ், “இந்த சந்திப்பில் இதுவரை நீங்கள் நன்றி சொல்லவே இல்லை.” என்றார்.
இதற்கிடையில் ட்ரம்ப் ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார். இருவரும் கூட்டாக ஊடகங்களை சந்திக்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை அறிக்கையில், அதிபர் ட்ரம்ப்புடன் உக்ரைன் அதிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உக்ரைன் அதிபர், அவருடன் வந்த குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறியுள்ளது.
ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததால் டேபிளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்க தலையீட்டில் அமைதி ஏற்படுவதை ஜெலன்ஸ்கி விரும்பவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் அதிபர் உண்மையிலேயே ஒரு சமாதான பேச்சுவார்த்தையைதான் விரும்பினாரா எனத் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், பேச்சுவார்த்தை வெற்றியடையாமல் போனதற்கு ஜெலன்ஸ்கி அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இது விரோதமாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் டிரம்ப்புடனான சந்திப்பு வாக்குவாதமாக மாறியதற்கு ஜெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்தார். எனினும் டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேச்சுவார்த்தையில் தோல்வி என்பது இரு தரப்புக்குமே நல்லதல்ல என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், “நாங்கள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஏதாவது மோசமான செயலைச் செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.