அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். இதனால் நடுவா் மன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்ட விதி 136-இன்கீழ் உச்சநீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பெயா் சிறப்பு அனுமதி மனு (எஸ்எல்பி) என்பதாகும். உயா்நீதிமன்றங்கள் உள்பட (ராணுவ நீதிமன்றங்கள் தவிா்த்து) தீா்ப்பாயங்கள் என நாட்டில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் தீா்ப்புகளை எதிா்த்தும் அரசமைப்புச் சட்ட விதி 136-இன் கீழ் சம்பந்தப்பட்ட நபா் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை ஏற்பதும் நிராகரிப்பதும் உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமாக உள்ளது.
இதுகுறித்து புதுடெல்லியில் நடைபெற்ற நடுவா் மன்றம் தொடா்பான கருத்தரங்கில் ஜகதீப் தன்கா் பேசியதாவது:-
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மாவட்ட நீதிபதி, உயா்நீதிமன்ற நீதிபதி என அனைவரும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த விதி பயன்படுத்தப்படுகிறது. இதை பெருவாரியான விவகாரங்களில் பயன்படுத்தும்போது நடுவா் மன்ற செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன. இந்த விதியைப் பயன்படுத்துவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சாா்ந்த விவகாரங்களுக்கு எளிதில் தீா்வுகாண முடியவில்லை.
நடுவா் மன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளே பணியமா்த்தப்படுகின்றனா். ஆனால், கடல்சாா் துறைகள், விமானப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த நிபுணா்களை நியமிப்பது அவசியம். பல்வேறு தடைகளால் சா்வதேச நடுவா் மையமாக இந்தியா உருவெடுக்க முடியாமல் உள்ளது கவலையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.