பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ஆகாஷ் ஆனந்த் என் அரசியல் வாரிசு கிடையாது. சாகும் வரை அரசியல் வாரிசை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளதோடு மருமகனிடம் இருந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை அவர் அதிரடியாக பறித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி. தலித் தலைவராக அறியப்படும் இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். மாயாவதிக்கு தற்போது 69 வயது ஆகிறது. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது வயதாகிவிட்டதால் மாயாவதியால் தீவிரமாக அரசியலில் ஈடுபட முடியவில்லை. இருப்பினும் தேர்தல் சமயங்களில் அவர் பிரசாரங்கள் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தான் மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.
ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆவார். தற்போது ஆகாஷ் ஆனந்த்துக்கு 33 வயது ஆகிறது. இவர் கடந்த 2016ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கினார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டார். மேலும் பாதயாத்திரை உள்பட கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் மாயாவதி அவரை தனது வாரிசாக அறிவித்தார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், எனது அரசியல் வாரிசாகவும் ஆகாஷ் ஆனந்தை நான் அறிவித்தேன். ஆனால் கட்சியின் நலன் கருதியும், அவர் மெச்சூரிட்டி அடையும் வரையும் இரு பொறுப்புகளில் இருந்தும் அவர் விலக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்தார். அதன்பிறகு அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
இப்படியான சூழலில் தான் தற்போது 2வது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கி உள்ளார். அவருக்கு பதில் அவரது தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ராம்ஜி கவுதம் ஆகியோரை அந்த பொறுப்பில் நியமித்துள்ளார். மேலும் இந்த முறை ஆகாஷ் ஆனந்திடம் இருந்து பதவியை மாயாவதி பறித்ததன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பியும் அவரது மாமனாருமான அசோக் சித்தார்த்துடன் அவர் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார்.
இதுபற்றி மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‛‛அசோக் சித்தார்த்தின் மகளை ஆகாஷ் ஆனந்த் திருமணம் செய்துள்ளார். அசோக் சித்தார்த் தனது மகள், மருமகன் மூலம் கட்சியில் செயல்பட நினைக்கிறார். இதனால் கட்சியின் நலன் கருதி ஆகாஷ் ஆனந்திடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பு பறிப்புக்கு முழுக்க முழுக்க அசோக் சித்தார்த் தான் காரணம்” என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்த முடிவையும் மாயாவதி வாபஸ் பெற்றுள்ளார். தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்க போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவை டெல்லியில் கடந்த மாதம் 17 ம் தேதி கட்சி தலைவர்களுடன் நடந்த மீட்டிங்கில் மாயாவதி எடுத்தார். ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று தான் வெளியிட்டுள்ளார் என்கின்றனர் கட்சியின் மூத்த தலைவர்கள்.