திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூரில் கிராவல் குவாரி அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கரடித்புதூர் கிராமத்தில் அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டத்துக்கு புறம்பாக கிராவல் குவாரி அமைக்க ஆணை பிறப்பித்த திருவள்ளூர் மாவட்ட அரசு நிர்வாகத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குவாரி வேலை தொடங்கப்பட்டு கிராவல் குவாரிக்கு வந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்டு, இங்கு குவாரி அமைக்க கூடாது என போராடி வருகின்றனர். கிராமசபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, கிராம மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டு ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை கடும் கண்டனத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கனிம வளம் திருடு போவதை கண்காணித்து தடுக்க வேண்டிய ஊரக வளர்ச்சி, வருவாய்த் துறை, கனிம வளம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் மணல் கொள்ளைக்கு துணையாக நிற்பது அரசின் நிர்வாக சீர்கேடுக்கு முக்கியச் சான்று.
எனவே, கிராவல் குவாரி அமைக்கும் அனுமதியை ரத்து செய்து அதில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கனிம வளத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.